Sunday, May 15, 2016

கடவுள் இசைக்கத் துவங்கி 40 ஆண்டுகள்! - Part 1


 


இசைஞானி இளையராஜா தன் இசைப்பயணத்தை திரைப்படங்களில் அதிகாரபூர்வமாக துவங்கி நேற்றோடு 40 ஆண்டுகள் ஆகிறது. அதாவது 40 வருடங்கள் முன்பு தான் 14 May 1976 அன்று, அவரது முதல் படம் ‘அன்னக்கிளி’ வெளியானது!

இதையும் சரி, ’இளையராஜா 1000’ என்கிற 1000 படங்களுக்கு இசையமைத்த சாதனை நிகழ்வையும் சரி, பல வாரங்களுக்கு, பலவாறகக் கொண்டாடலாம்! ஒரு முடிவே இல்லாமல் கொண்டாடிக்கொண்டே கூட இருக்கலாம்!

அப்படி, 40 ஆண்டுகள் நிறைவை, இசைஞானியின் 40 பாடல்களுடன், அந்தப்பாடல்களிலுள்ள ஏதேனும் ஒரு விஷயம்/நுட்பத்தை சொல்லி, கொண்டாடவே இப்பதிவு! இது என்னுடைய “இனியவை நாற்பது”!


 1. மூச்சு நின்றது! 





மூச்சு விடாமல் SPB ”பாடும்” இந்தப்பாடலுக்கு அறிமுகம் தேவையில்லை! பல்லவி வரிகள் சாதாரணமாகவும் சரணம், இடைவெளி இல்லாமல் அதாவது மூச்சுவிட இடம் கொடுக்காமல் தொடர்ச்சியாக வரும்! ஆனால், இன்னொரு பாடல் இருக்கிறது! அதில் பல்லவி கூட தொடர்ச்சியாகத்தான் வரும்! 





தம்தன நம்தன தாளம் வரும் என்ற இந்தப்பாடல், சரணம் & பல்லவி இரண்டுமே தொடர்ச்சியாக இடைவெளி இல்லாமல் வரும்! ஸ்கூல் படிக்கும் போது ’மண்ணில் இந்த காதல்’ மூச்சு விடாமல் பாடி ஜெயித்தவர்கள் / போரடித்துப்போனவர்கள் இப்போது இந்தப்பாடலை முயற்சிக்கலாம்! மூச்சு நின்றுவிடும்! 😂😂

(இந்தப்பாடலைப்பற்றி ராஜா பேசும் ஒரு வீடியோ :- https://www.youtube.com/watch?v=OKT7psGQ41E )


2. எதிர்ப்பாட்டு!

மேற்கத்திய இசையில் counterpoint என்கிற சங்கதி உண்டு. அது நம் தமிழிசையிலும் இருக்கும் என்ன பெயர் என தெரியவில்லை. இது ராஜா அடித்து துவைத்து க்ளிப் மாட்டிய ஒரு மிகப்பிரபலமான concept! அவர் இசையில், மிக எளிமையான, மிக கடினமான என எல்லா விதமான examplesஉம் counterpoint க்கு உண்டு! அதில் மூன்றை பார்ப்போம்!





சிட்டுக்குருவி - ”என் கண்மணி” என்ற இந்தப்பாடல் தான் முதன்முதலாக Counterpoint யுக்தியை பயன்படுத்திய பாடல் என ராஜாவே சொல்கிறார்! ( https://www.youtube.com/watch?v=iZqWFe1-kqo ) இந்தப்பாடலில் Counterpoint பல்லவியில் மட்டுமே வரும். 





பல்லவி சரணம் இரண்டிலுமே Counterpoint பயன்படுத்திய ஒரு மிகப்பிரபலமான & Counterpoint ஐ எளிமையாகப்புரிந்துகொள்ளகூடிய ஒரு பாடலாக இது இருக்கிறது! பாடல் முழுக்க, ஜானகிக்கு அடுத்த வரி பாடாமல், ஜானகி பாடும் ஒவ்வொரு வரி முடிந்ததும் அதற்கு Counter கொடுப்பது போல், எதிர்ப்பாட்டு போல் ராஜா பாடுவார்! (பல்லவியில் Invertible Counterpoint உம் உண்டு என்பது சில ராஜா ரசிகர்களின் வாதம்!)

மேற்சொன்ன பாடலில் வரிகளால் counter கொடுப்பதை பார்த்தோம்! இந்த தெலுகு பாடலில், பாடல் முழுக்க, ஜானகி ஒரு ஹம்மிங் குரலை மட்டுமே counter கொடுத்து பாடுவார்! பாடல் முழுக்க, இந்த counter humming தவிர ஒரு வரியும் பாடமாட்டார் ஜானகி! சற்று சிக்கலான வேலை தான் ஆனால் ஜானும்மா Rocks!







3. இனி ஏறுமுகம் மட்டுமே! 🚀🚀






” ச ரி க ம ப த நி ” என்கிற ஏழு சுரங்களின் reverse தான் ‘ச நி த ப ம க ரி”.  தமிழிசையில் ” ச ரி க ம ப த நி ” என்ற வரிசை ஆரோகணம் என்றும் அதன் ரிவர்ஸ் ‘ச நி த ப ம க ரி” அவரோகணம் என்றும் இருக்கும். ஒரு பாடலில் இந்த ஏழு notesஉம் எந்த orderஇல் வேண்டுமானாலும் இருக்கலாம்!

ஆனால், ஏறுமுகமான ஆரோகணம் மட்டுமே பயன் படுத்தி, அதாவது, ரிவர்ஸ் orderஇல் எந்த மெட்டும் முடியாது, முழுக்க “ச ரி க ம ப த நி” இவற்றுள் ஏதோ ஒரு வரிசையை மட்டுமே கொண்டு இருக்குமாறு அமைந்த பாடல் இது. 

காரணம், இந்தப்பாடலின் சிச்சுவேஷன் படி, (டாஸ்மாக் போன்ற) ஒரு பெரிய இறங்குமுகத்தை சந்திக்கும் ஜேகேபி என்ற இசைக்கலைஞன், அதிலிருந்து மீண்டு, இனி (மதுவிலக்கு போன்ற) ஏறுமுகம் மட்டுமே என் இசை வாழ்வில் இருக்கும் என்பதை மறைமுகமாக குறிக்கும் விதமாக, ஆரோகண notes மட்டுமே கொண்ட இந்தப்பாடலை பாடுகிறார்!



4. விரக தாபம்!






“என்னுள்ளில் எங்கோ” நாயகிக்கும் இன்னொருவனுக்கும் உள்ள முறையற்ற உறவை சொல்லும் இந்தப்பாடல், நாயகியின் dual mind குழப்பத்தை மிக அருமையாகச்சொல்லும் பாடல்! இதில் பல்லவியில் வரும் வரிகள் - ‘ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது” என்னும் வரியில் வரும் high pitch மெட்டு, உண்மையிலேயே ஒரு கேள்வி கேட்கும் தொனியில் இருக்கும். சரியா தவறா என்ற இருவிதமான குழப்ப மனநிலையை இசையால் குறிக்கிறது! 


அடுத்த வரியே “ஆனால் அதுவும் ஆனந்தம்” என்று இருக்கும், மெட்டு high pitch இல் இருந்து மெதுவாக இறங்கும்! ”சரி தான்!” என்று தனக்குத்தானே சமாதானம் கொள்வது போல் இருக்கும் இந்த வரியின் மெட்டு!

பாடல்களில் வரும் மெட்டு, பாட்டின் சூழல்/அதன் கதாபாத்திரங்களின் உணர்வு ஆகிற்றை வெளிப்படுத்தும் விதமாக இருக்கவேண்டும் என்பதை, அட்டகாசமாக நிறைவு செய்கிறது மேலுள்ள மெட்டுக்கள்! 


5. தாலாட்டும் பூங்காற்று!





ஒரு மிகப்பிரபலமான காலத்தை வென்ற மெலடி பாட்டு! பாடிய ஜேசுதாஸ், பாட்டை எழுதிய கண்ணதாசன்(கடைசிப்பாட்டு) பாலுமகேந்திராவின் அருமையான படமாக்கம், கமல் ஸ்ரீதேவியின் இயல்பான நடிப்பு, இவை எல்லாம் போக, இது ஒரு அற்புதமான தாலாட்டுப்பாடல்! தூங்க வைக்கும் குணமுடைய பாட்டு! ஒரு பாட்டு(அல்லது படம் கதை) கேட்டு தூக்கம் வருகிறதென்றால் பெரும்பாலும் அது போரடிக்கும் விஷயம் ஆனால் இந்தப்பாடல் ஒரு குழந்தையை தூங்கவைக்கும் தாலாட்டுப்பாடல்! 

உலகப்புகழ் பெற்ற தாலாட்டுப்பாடலான Brahms Lullaby க்கு ( https://www.youtube.com/watch?v=T6nb35I9w-8 ) நிகரான ஒரு நம்மூரில் உருவான Lullaby தான் ‘கண்ணே கலைமானே”!

6. கோரஸ் திருவிழா!





பூந்தளிராடும் இந்தப்பாடலில் ஏகப்பட்ட, விதவிதமான கோரஸ் & ஹம்மிங் நிறைந்திருக்கிறது! ஒவ்வொன்றும் ஒரு வி/இதம்! இவற்றை மட்டும் தனியாக பிரித்தெடுத்து, தெளிவாக ஸ்கெட்ச் போட்டு விளக்கியிருக்கிறார் ரவிஷங்கர் சார்(சீனியர் மாஃபியா!) 

0.24 இல் வரும் கோரஸ், இரண்டு ட்ராக்! அதாவது ஒரே நேரத்தில் இரண்டு கோரஸ் செக்‌ஷன் மாறி மாறிப்பாடினால் தான் இப்படி இருக்க முடியும்! ஆனால், முதல்முறை கேட்கும்போது ஒரே கோரஸ் குழு மட்டும் பாடுவதாக நாம் எண்ணிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது!

முழுப்பாடல் :- https://www.youtube.com/watch?v=crO9G1iUzGI

7. ஒரு வயலின் விளைச்சல்!





பொதுவாகவே வயலின் ஒரு சோக இசைக்கருவி என்ற ஒரு பொதுப்பிம்பம் உண்டு! அது தவறும் அல்ல! ஏனெனில், மற்ற இசைக்கருவிகளை விட ஒரு solo வயலின் வைத்து மெதுவாக ஒரே ஒரு நோட் இழுத்தால் கூட அதில் ஒரு சோகம் இருக்கும்! மட்டுமின்றி, நிறைய உலகப்புகழ்பெற்ற மேற்கத்திய சோக இசைகள் வயலினில் உண்டு! ராஜா இசையிலும் கொட்டிக்கிடக்கும் உதாரணங்களில் ஒன்று - சிங்காரவேலனில் வரும் இந்தப்பாடல் ஆரம்பத்தில் வரும் solo வயலின் - https://www.youtube.com/watch?v=b4XLmm-m1HY

ஆனால், விதிகளை உடைக்கவே பிறந்த இசைஞானிக்கு, எந்த பிம்பத்தையும் உடைப்பது ஒரு ஜுஜுபி வேலையே! அந்த வகையில் புன்னகை மன்னன் படத்தில் வரும் இந்தப்பாடல் காலகாலமாக வாழும்! பாட்டு முழுக்கவே வயலின் வேகமாகவும் சோம்பலாகவும் துள்ளலாகவும் பின்னிப்பெடல் எடுக்கும்!

இதே solo வயலின் மூலம் ரஜினி ஸ்டைலுக்கும் ஒரு அருமையான BGM!! - நெற்றிக்கண் படத்தில் - https://www.youtube.com/watch?v=HErLC062sSY

(காலகாலமாக வாழும் பாடலுக்கு ஆடியன்சே இருக்கமாட்டார்கள், சார்லி சாப்ளின்(செல்லப்பா) ஒருவர் மட்டுமே ஆடியன்ஸ். ஆனால் சாப்ளின் போன்ற கலைஞர்கள், அவர் ஒருத்தர் பார்ப்பது மட்டுமே பல ஆயிரம் லட்சம் பேர் பார்ப்பதற்கு சமம் என்று சொல்லிவிட்டு ஓடுகிறான் குறியீடு குப்ரிக்! 🏃🏃🏃😂)

8. உடல் எனும் பாத்திரம்





”நான் கடவுள்” படத்தில் வரும், கேட்டாலே அழுகை வரவைக்கும் பாடல் இது! ஆனால் இது ரமணமாலை ஆல்பத்தில் ராஜாவே எழுதி பாடிய பாடல்! சுட்டி - https://www.youtube.com/watch?v=jFufifkRMOc

இதில் வரும் வரிகள் “அத்தனை செல்வமும் உன்னிடத்தில், நான் பிச்சைக்கு போவது எவ்விடத்தில்” என்பது, பிச்சை கேட்கும் விளிம்புநிலை பிச்சை மனிதர்கள் பாடுவதான பொருளில் தான் படத்தில் வரும். ஆனால், ராஜா, இந்த வரிகளை, இம்மை மறுமை(மறுபிறவி) குறித்து எழுதியுள்ளார்! குணா அப்பனென்றும் அம்மையென்றும் போன்ற ஒரு மிக உயர்ந்த பொருள் கொண்ட பாடல் இது! ஆனால், நான் கடவுள்-விளிம்பு மனிதர்களுக்கும் பக்காவாகப் பொருந்திப்போகிறது!

9. பல்லவி ஐடியா பல்லவி!






மணிரத்தத்தின் முதல் படமான பல்லவி அனுபல்லவி படத்தில் வரும் இந்தப்பாடல் ‘நகுவா நயனா’ பற்றி சொல்லவேண்டியதில்லை! பல வருடங்கள் பின், இதன் பல்லவி, Idea Cellular விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்டது! சுட்டி - https://www.youtube.com/watch?v=ElEk97jwNxU


10. நில்லா இசையே!





திருவாசகம் ஆல்பத்தில் வரும் ’பொல்லா வினையேன்” என்ற இந்தப்பாடல், longest in the album! 20 நிமிடங்கள்! இதற்குள், தனித்தனியாக எடுக்கக்கூடிய அளவுக்கு ஏகப்பட்ட தனிப்பாடல்கள் போன்ற பகுதிகள் உள்ளன! ஆனால் அவை அனைத்தும், பிரித்தெடுக்கமுடியாத படி மிகக்கோர்வையாகவும் அமைந்துள்ளது! இத்தனை பாடல் துண்டுகள் ஒரே பாட்டில் உள்ளதென்றால், ஒரு musical piece இல் இருந்து இன்னொரு piece க்கு போக, ஒரு transition தேவைப்படுமல்லவா?! அதுவும் மிக அட்டகாசமாக நிகழும்! இசைஞானியின், மிகச்சிக்கலான பாடல்களில் ஒன்றாக இதை நிச்சயம் சொல்லலாம், அதைச்சொல்ல பெரிய இசையறிவு தேவையில்லை, கேட்டாலே புரியும்! ஏகப்பட்ட Layers கொண்ட பாடல் இது என! பாடல் ஆரம்பிக்கும் இடத்திலிருந்து முடியும் இடத்துக்கு வரும்போது, ஆரம்பத்துடன் எப்படி இணைகிறது என கேட்போறை சற்றே தடுமாறவே செய்யும் அளவுக்கு ஒரு படு சிறப்பான brilliance, பாடல் முழுக்க நிறைந்த symphonic musical piece இது!

இதைப்போலவே நீளமான மற்றொரு இசைக்கட்டு, Nothing but wind இல் வரும் 16 நிமிட Composer's Breath! ஆனால் அதை விட இதில் musical transitions, சிக்கல்கள் அதிகம்! 


11. ஒரு ராஜா பாட்டுக்குள்ளே பல தாளத்தில்!!





ஒரே பாடலில் பல sub பாடல்கள் கொண்ட இசைக்கட்டும், ராஜா நிறைய செய்திருக்கிறார் தான்! அதில், விருமாண்டியில் வரும் கருமாத்தூர் காட்டுக்குள்ளேயும் அந்த வகை தான். என்ன, இதில் சற்றே சுலபமாக தனிப்பாடலாக பிரித்தெடுக்க முடியும்! இந்தப்பாட்டில், ஒவ்வொரு தனிப்பாடல் பகுதியும் வெவ்வேறு தாளக்கட்டில் அமைந்திருக்கும், மட்டுமன்றி, மெதுவாக ஒவ்வொன்றிலும், பாட்டின், தாளத்தின் வேகம் சற்றே கூடிக்கொண்டே வரும்! கடைசியாக, “ஆடிக்கடைசியிலே உனக்கொரு பூச வெப்போம்” இல் வந்து முடியும்! ராஜாவின், அதிகம் கொண்டாடப்படாத, ஆனால் மிக அதிகமாகக்கொண்டாடப்படவேண்டிய ஒரு நாட்டுப்புறப்புதையல் இது!



12. ஏழு சுரங்கள்!





”தும்பி வா” என்ற இந்தப்பாடல், இந்தத்தலைமுறையில் பிரபலமானது, ஜெயாடிவியின் 2005(?) ராஜா கன்சர்ட்இல் இருந்து தான் என நினைக்கின்றேன்! 







அதுவும், குறிப்பாக, மேற்கண்ட படத்தை ஓடவிட்டபடி ‘தும்பி வா” பின்னணியில் ஓடும் காட்சி, ஜெயா டிவியில் மிகப்பிரபலம்! ஆனால் வெளியான காலத்திலிருந்தே மிகப்பிரலமாகவே இருப்பதால், இதுவரை இந்தப்பாடல், ஒன்றல்ல இரண்டல்ல 7 முறை, வெவ்வேறு மொழிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது! மலையாளம் மற்றும் இதர மொழிகளில், ஒரு குடுப்பப்பாடலாக பெருவெற்றி பெற்று, தமிழில், சங்கத்தில் பாடாத கவிதை என ஒரு erotica பாடலாக மாறியது! இதுவே இந்தியில் அமிதாப் நடித்த “பா” படத்தில் Gum Sum Gum என்று ஒரு அழகிய கோரஸ் பாடலாக வந்து வெற்றிபெற்றது!


13. How to Bach it?!?





ராஜாவின் தனி இசைத்தொகுப்பான How to Name it இல் வரும் I Met Bach At My House இதில் 2.00 வரும் இசை! இதற்கு inspirationஆக ராஜா சொல்வது 15th Century Composer Bach's Violin Sonata No.6! இதை, மிக எளிமையாக, அவரே கீழ்கண்ட பேட்டியில் 3.00 நிமிடத்தில் விளக்குகிறார்!





இசை எல்லைகளற்ற மனம், மேற்கத்திய இசையை செவ்வியல் இசையாகக்கேட்டு அதை அப்படியாக நமக்கு வடித்தும் கொடுத்த இசைஆல்பம் தான் How To Name it!

14. வேறிசை ஆகும் ஓர் இசையின் ’வேர் இசை’

ஒரு படத்தில் ஒரே பாடலை, வெவ்வேறு விதமாக மாற்றி இசைக்கும் வழக்கம், ராஜாவுக்கு புதியதே அல்ல! மற்ற இசையமைப்பாளர்களும் செய்துவரும் ஒரு வழக்கமான யுக்தி தான் இது! ஆனால், ராஜா, எதை மாற்றுவது, எப்படி மாற்றுவது, எதை அப்படியே மாற்றாமல் பயன்படுத்துவது என்கிற விஷயங்களில் தான் மேதைமை காட்டுகிறார்!

இதில், மிகப்பிரபலமான உதாரணம் நாயகன் ’தென்பாண்டிச்சீமையிலே’ பாடல்! ஆரம்பத்தில், 1) ஒரு சிறுவனின் அனாதையான நிலை  2) அவனுக்கு மும்பையில் கடவுளாக உதவும் ‘வாப்பா’வின் ஆதரவு 3) பின்னாளில் அவனுக்கு அமைந்த குடும்பத்தில், குழந்தைகளிடம் பாடும் ஒரு தாலாட்டுப்பாடல்

இதை வெளிப்படுத்த ஒரு வெர்ஷன் :-




4) பின்னர், மகன் இறந்த சோகம் அதிர்ச்சி, 5) நாயக்கரே இறந்தபின் அவர் முழு வாழ்வை காட்டும் மாண்டேஜ் 





இப்படி ஒரே மெட்டுக்கு, அதன் தாளம், அதன் முன் பின் வரும் இசை, இவற்றை மாற்றியே, தேவையான Mood Create செய்கிறார்.

இதே போல், மகாநதி படத்தில் “தைப்பொங்கலும் வந்தது” பாடலும், 4 முறை வரும்! நான்கிலும், சூழலுக்கேற்ப, வரிகளும், தாளமும் மாறும்! கீழ் உள்ள சுட்டியில் தாள மாற்றங்களை எளிதாக கேட்கலாம்!  

https://soundcloud.com/vijeeth/mahanadhi-4-songs


15. பேர் சொல்லும் ராகம்!





கவிஞர் வாலி, தான் எழுதும் பாடல்களில், நாயகன்/நாயகியின் பேர் எங்காவது வரும் படி எழுதிவிடுவார்! இதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. இதே போல், இசையால் பேர் சொல்வார் ராஜா! பல உதாரணங்களில் ஒன்று - தெலுங்கு ‘ருத்ரவீணா’ படத்தில் நாயகி பெயர் லலிதா! அரிதாகப்பயன்படுத்தப்படும் லலிதா ராகத்திலேயே ராஜா அமைத்த அற்புதமான பாடல் தான் இது! 

பாடல் மட்டுமின்றி படத்தின் பெரும்பான்மை பின்னணி இசையும் அதே ராகத்தில் தான்! 

https://soundcloud.com/vijeeth/rudraveena

 
16. இயற்கை இசை!





இயற்கை சூழலில் பாடப்படும் ராஜா பாடல்கள் எக்கசக்கம்! ஆனா இந்தப்பாடல் நீளமான பாடல்! 7.10 நிமிடங்கள்! Youtubeஇல் full version இல்லை.. Visualsஉடன் பார்க்க விரும்பினால் கீழ்கண்ட சுட்டியை பார்க்கவும்!





“கீரவாணி” என்ற புகழ்பெற்ற “கார்த்திக் பானுப்ரியா” நடித்த படத்தில் உள்ள இன்னொரு பாடல் இது! “கீரவாணி” Counterpoint க்கு மற்றொரு சிறந்த உதாரணப்பாடல்!

17. பொல்லாத PostLude!





பாடலுக்கு முன்பு வரும் முன்னிசை PreLude, போலவே பாடலுக்கு பின்பு வரும் பின்னிசை Postlude! பெரும்பாலும் (நீண்ட) பின்னிசை கொண்ட பாடல்கள், மிகக்குறைவே! காரணம், அதற்கான சூழல் இருக்காது! பாடல் முடிந்ததும் காட்சி தொடங்கிவிடும். எப்போதாவது சூழல் அமையும், அப்படி ஒரு அருமையான பின்னிசை கொண்ட பாடல் தான், ஹேராம் இன் ‘பொல்லாத மதன பாணம்’! இதில், பாடல் நாட்டுப்புற வகையில் இருக்கும், முடிந்தபின், நாயகன் நாயகி இடையே கலவி காட்சி, மேற்கத்திய இசையில் பிரம்மாண்டமாக இருக்கும்! அதே சமயம் நல்ல மெல்லிசையும் இருக்கும்! ஹங்கேரியில் பதிவு செய்யப்பட்ட Orchestration rocks!

18. ராக்கம்மாவின் குனித்த புருவம்!





இதுவும் நாம் எல்லாரும் அறிந்த பாடல் தான்! இதில் பாடல் முடிவில் வரும் ‘குனித்த புருவமும்’ பாடலும் ஒரு PostLude தான்! இதிலும், மைய பாடலான ராக்கம்மாவும் குனித்த புருவம்மும், இவை இரண்டும் முற்றிலும் Contrastஆக இருக்கும்! ராக்கம்மா ஒரு துள்ளாட்டப்பாடல், ஆனால் குனித்த புருவம் ஒரு மெதுவான மென்மெலடி! ஆனால் அழகு என்னவெனில், கட்டக்கடைசியில், ராகம்மா பாடலும் குனித்த புருவமும் பாடலின் ஆரம்ப கோரஸும், ஒரே தாளத்தில் ஒரே நேரத்தில் செமையாக Sync ஆகி பாடப்பெறும்! இரண்டு வெவ்வேறு பாடலை ஒரே நேரத்தில் கேட்பது என்பது ஒரு புதுமையான ஆனந்தம்!

19. நவீன வசந்தம்!






ஒரே பாடலை ஒரே படத்தில் பலவிதமாக பயன்படுத்திய நிறைய உதாரணங்கள் பார்த்தோம், ஒரே மெட்டை பல படத்தில் பயன்படுத்தியதையும் பார்த்தோம்! இந்த க்யூட் பாடலில், முதல் & இரண்டாம் பல்லவி இரண்டும் வெவ்வேறு percussion தாள இசை கொண்டிருக்கும்! முதலில் நாயகன் பாடும் பல்லவியில் மிருதங்கமும், பின்பு நாயகி பாடும் பல்லவியில் நவீன beats உம் இருக்கும்! ஜானும்மா வழக்கம்போல் அசத்தும் இந்த 2nd பல்லவியில், கூடவே Bass guitarஉம், ஒரு போடு போடும்!

இவை போக, இந்த பாடலுக்கு முன்பு வரும் காட்சி, அதில் வரும் பின்னணி இசை, அதில் peak ஆக, குளத்தில் நீந்தும்போது வரும் Strings இசை!! டோட்டலீ வேற லெவெல்! தெய்வ லெவெல்! சிம்ப்ளீ, ராஜா லெவெல்!

20. அல்லிப்பூவே!





பொதுவாக, ஒரு பாடலின் மெட்டை ஒரு கம்போசர் மறுபடி பயன்படுத்துவது கற்பனை வரட்சியாகத்தான் பார்க்கப்படும். ஆனால் ராஜா இதிலும் விதிவிலக்கு! மேல் உள்ள மலையாளப்படம் ‘பாக்யதேவதா’வில் வரும் இந்த பாடல் ’அல்லிப்பூவே’ இது உண்மையிலேயே 32 வருடங்கள் பின் மீண்டும் மலர்ந்த குறிஞ்சிப்பூவே தான்! 32 வருடங்கள் முன்பு வந்த மிகமிகப்பிரலமான ஒரு “......பூவே” வின் தாக்கம் இதிலும் இருக்கும்! ஆனால் இது காப்பியும் அல்ல! Brilliant Reuse! இத்தனைக்கும் very minimal amount of reuse தான்! 

பாடலின் ஆரம்பம் பல்லவி எல்லாம் ஒரு க்ளூவும் கொடுக்காது! சரணம் is the culprit! 

Read Part 2 Here - http://itekvijay.blogspot.com/2016/05/40-part-2.html

1 comment: